திருச்சி மாநகரில் சமீப காலமாக நடைபெற்று வரும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வரும் திருடர்களை கண்டுபிடிக்க திருச்சி மாநகர காவல் துறை சார்பில் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையர் முத்தரசு மேற்பார்வையில், ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில், குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருச்சி புங்கனூர், காந்தி நகரை சேர்ந்த கிரிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 39 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் அண்ணாசிலை பேருந்து நிறுத்தம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரிடம் அவரது கவனத்தை திசைதிருப்பி அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க செயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் நாலேமுக்கால் பவுன் தங்க செயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 47 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் 4 பவுன் தங்க செயின் 2, 1 பவுன் மோதிரம் ஒன்று, சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 57 வயது மதிக்கத்தக்க பெண்மணியிடம் மூன்றேமுக்கால் பவுன் தங்க செயின் மற்றும் N.S.B. ரோட்டில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்க வந்த வயதான தம்பதியினரின் கவனத்தை திசைதிருப்பி அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க செயின் ஆகிய குற்றவழக்கில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கைது செய்து அவர்களிடமிருந்து 22 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெரிய கடை வீதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 சவரன் தங்க நகையை திருடி சென்றவரை 6 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து களவு போன நகை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் மாநகரில் பொன்மலை மற்றும் அரியமங்கலம் ஆகிய காவல்நிலைய கன்னக்களவு வழக்குகளில் சம்பவ இடத்திலிருந்து மாநகர விரல்ரேகை பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட விரல்ரேகை பதிவுகளை ஒற்றை இலக்க விரல்ரேகை குற்ற பதிவேடுடன் ஒப்பிட்டு குற்ற செயல்களில் ஈடுபட்ட எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்துகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி திருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட நான்கு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 39 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் மாநகர விரல்ரேகை பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பணிப்பாராட்டு சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளித்து வெகுவாக பாராட்டினார்.