வஃக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் : தொல். திருமாவளவன் எம்.பி. பேட்டி
திருச்சி ஏப்.5 வஃக்பு வாரிய சட்டம் நிறைவேற்றியது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. ஒன்றிய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம் இன்று சொல்ல கூடிய அளவுக்கு வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பா.ஜ.க அரசு கொண்டு நிறைவேற்றி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. ஆளும் பா.ஜ.க. அரசு தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இதனை அரங்கேற்றி உள்ளனர். வேறு எந்த மதத்தின் சொத்து விவகாரங்களில் தலையிடாத ஒன்றிய அரசு வஃக்பு வாரியத்தில் அடாவடித்தனமாக தலையிடுகிறது. வஃக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாத நபர்களை நியமிப்பதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர். இதற்கு வெளிப்படை தன்மை எனக் கூறுகின்றனர்.
பவுத்த மதத்தில் புத்த விகாரில் பவுத்தர் அல்லாதவர்களை நியமித்து இன்று வரை நடைமுறைப்படுத்த வருகின்றனர். இதனை எதிர்த்து புத்த பிட்சுகள் போராடி வருகின்றனர். ஒன்றிய அரசின் மத விரோத போக்கை விடுதலை சிறுத்தை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஒன்றிய அரசின் வஃக்பு வாரிய சட்ட திருத்தத்தை கண்டித்து வரும் 8ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர் உள்ளோம். 232 எம்.பிக்கள் திருத்த சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளோம். மாநிலங்களவையில் 95 பேர் எதிர்த்து வாக்களித்துள்ளோம். தமிழ்நாட்டில் அதிமுகவும் எதிர்த்து வாக்களித்தது ஆறுதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு இதனை சாதித்திருக்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக கூட்டணி கட்சிகளும் பா.ஜ.கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். பிரதமர் இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கிறோம். நீட் மசோதாவை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது. இந்த சூழலில் 9ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டியுள்ளார். அவரது முயற்சிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளோம்.
நீட் விவகாரத்தில் அரசியல் காரணங்களை முன்னிறுத்தாமல் அனைத்து கட்சிகளும் ஓரணியில் ஒன்று திரள வேண்டும். திமுக அரசு பதவி ஏற்ற காலத்தில் இருந்து நீட் எதிர்ப்பை முழு மனதோடு கடைபிடித்து வருகிறது.அவ்வாறுமுயற்சி எடுக்காமல் இருந்தால் வாக்குறுதி காற்றில் பறக்க விட்டார்கள் என கூறலாம். விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள் தான். தமிழ்நாடு ஆட்சியாளர்கள் மீது விமர்சனம் செய்வது வேடிக்கையாக உள்ளது இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் பள்ளிக்கல்வித்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. வஃக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து பீகாரில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர் இது கூட்டணி கட்சிகளுக்கு பெரிய சவுக்கடி என தெரிவித்தார்.