திருச்சி மாநகரத்தில் காந்திமார்க்கெட், பொன்மலைப்பட்டி ஆகிய இடங்களில் கடந்த வாரங்களில் அடுத்தடுத்து இரு கொலை சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்பவம் எதிரொலியாக மாநகரில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமீனில் சுற்றி திரியும் ரவுடிகள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதனை தொடர்ந்து மாநகர் முழுவதும் கடந்த 2 நாட்களாக அதிரடி வேட்டை நடந்தது. முதல்நாளில் 21 ரவுடிகளிலும், 2-வது நாளில் 42 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சரித்திரபதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் 31 பேரும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த 38 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான ரவுடிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபிறகு, திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிளை சிறைகளில் அடைத்தனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவுடன் அவர்கள், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.