வாலிபருக்கு அரிவாள் வெட்டு : தம்பதியினர் கைது
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் குடும்பத் தகராறு காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு.கணவன்,மனைவியை போலீசார் கைது செய்தனர்.
சிறுகனூர் அருகே திருப்பட்டூரில் உள்ள அரிசனத் தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் பழனிமுருகன்(25) . கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பட்டூர் செட்டியார் தெரு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது நாய் குறைத்துள்ளது இதனால் பயந்து போன பழனி முருகன் அதே தெருவில் உள்ள சீனிவாசன் வீட்டின் திண்ணையில் தஞ்சம் அடைந்தார். அப்போது சீனிவாசன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி வெளியே வந்து பார்த்தபோது பழனி முருகன் திண்ணையில் உட்கார்ந்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சீனிவாசனுக்கும் அவரது மனைவி தேன்மொழிக்கும் இடையே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேன்மொழி, சீனிவாசன் ஆகியோர் பழனிமுருகன் வீட்டிற்கு சென்று, எங்கள் வீட்டு பக்கம் நீ வந்ததால் தான் எங்களுக்குள் சண்டை ஏற்பட்டது என்று கூறி அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பழனிமுருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், தேன்மொழி ஆகியோரை கைது செய்தனர்.