இஸ்ரோவிற்கு சமூக ஆர்வலர் மிதிவண்டி பயணம்
24 நாட்கள் 500 கிலோ மீட்டர் ….
சந்திராயன்-3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோவிற்கு சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் சமூக ஆர்வலர்.
மணப்பாறை அருகே ஆலத்தூரில் இருந்து துவங்கிய சைக்கிள் பயணத்தை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது. சந்திராயன் – 3 வெற்றி விழா, காந்தியடிகள் அரையாடைக்கு மாறிய மதுரை சம்பவ நிகழ்ச்சி விழாவும் மற்றும் மதுவிலக்கு, மதநல்லிணக்கம், தேசிய ஒறுமைப்பாடு என 40 முறை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் தனது மனைவி சித்ராவுடன் பாதயாத்திரையாகவும் சைக்கிள் யாத்திரையாகவும் இதுவரை ஒரு லட்சத்து ஐந்து ஆயிரம் கிலோமீட்டர் பயணம் மேற்கொண்ட அகில இந்திய காந்திய மக்கள் இயக்க தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் கருப்பையாவிற்கு உலக சாதனையாளர் விருது வழங்கும் விழாவும் நடந்தது. விழாவுக்கு ஆதவன் கலை அறிவியல் கல்லூரி நிறுவன செயலாளரும், வையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான டாக்டர்.சூர்யா சுப்ரமணியன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். பொருளாளர் தங்கபாண்டியன் வரவேற்புரையாற்றினார். புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முனைவர் வி.முத்து, கருப்பையாவிற்கு உலக சாதனையாளர் விருது வழங்கினார். சர்வோதயா சங்க செயலாளர் சுப்அபிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, காவல் துணைகண்காணிப்பாளர் ராமநாதன் ஆகியோர் சைக்கிள் பயணத்தை துவக்கி வைத்து சிறப்புறையாற்றினர். விழாவில் சந்திராயன் – 3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி சாதித்தமைக்காக அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் கல்லூரி வளாகத்தில் இருந்து இஸ்ரோவிற்கு மூவர்ண தேசியக்கொடியுடன் சைக்கிள் யாத்திரை மேற்கொள்ளும் கருப்பையாவை சட்டமன்ற உறுப்பினர், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். கல்லூரி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
ஆலத்தூரில் இருந்து துவங்கிய சைக்கிள் யாத்திரை 500 கிலோமீட்டர் தூரம் 24 நாட்கள் பயணம் மேற்கொண்டு வருகிற அக்டோபர் 15 ம்தேதி அப்துல்கலாம் பிறந்தநாள் அன்று இஸ்ரோவை அடைய உள்ளார். செல்லும் வழியில் அறிவியல், உலக சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம், வளர்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.