திருச்சி அருகே உள்ள மணிகண்டம் ஊரணி பட்டியில் போலி மதுபான ஆலை செயல்படுவதாக மது ஒழிப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சுஜாத்தாவிற்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு தனிப்படை போலீசார் உடன் சென்ற மது ஒழிப்பு அமலாக்க பிரிவு மத்திய நுண்ணறிவு இன்ஸ்பெக்டர் அப்பகுதியிலுள்ள வெள்ளைச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டை சுற்றிவளைத்தனர். பின்னர் அங்கு ஆய்வு செய்தபோது அந்த வீட்டில் போலியாக தயாரித்து 1,700 மதுபாட்டில்கள் மது தயாரிக்க பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள், பாட்டிலில் ஒட்டும், ஸ்டிக்கர்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை
பறிமுதல் செய்த போலீசார் வெள்ளைச்சாமியின் வீட்டை வாடகைக்கு எடுத்து மதுபானம் தயாரித்த காரைக்காலைச் சேர்ந்த கார்த்திக்(வயது 35), அவனது நண்பர் காடுவெட்டியை சேர்ந்த சுந்தர்(வயது 37), திருவாரூரைச் சேர்ந்த பால முருகன்(வயது 32), வெற்றிச்செல்வன்(வயது 22), விஜயகுமார்(வயது 23), சூர்யா(வயது 25) ஆகிய 6 பேரையும் கைது செய்து மதுபானம் கடத்த பயன்படுத்திவந்த இன்னோவா கார் மற்றும் டூவீலர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். இது நாளிதழ்களுக்கு இன்ஸ்பெக்டர் சுஜாதா கொடுத்த பரபரப்பு செய்தி. ஆனால் உண்மையில் நடந்தது என்ன? நடப்பது என்ன? விரிவாக காண்போம் மேற்படி நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா வேறுயாருமல்ல திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமாரின் இரண்டாவது மனைவி ஆவார். டிஎஸ்பி சுரேஷ்குமாரின் ஊழல் பற்றி பின்னால் விரிவாக காண்போம். முதலில் அவரது மனைவியைப் பற்றி தெரிந்து கொள்வோம் திருச்சி
மத்திய மண்டல அமலாக்கப்பிரிவு கட்டுப்பாட்டில் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களை கொண்ட பெரிய மண்டலமாகும். 9 மாவட்ட மது ஒழிப்புப் பிரிவும் இவரது கட்டுப்பாட்டில் இருந்து வருவதால் இவர் மத்திய மண்டல ராணியாக சுற்றி வருகிறார். காரணம் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு மாதத்திற்கு ரூ.ஒரு லட்சத்தில் இருந்து ரூ.ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை இவருக்கு கப்பம் கட்டாயம் கட்டியாக வேண்டும். கப்பம் கட்டவில்லை என்றால் ஒன்பது மாவட்டங்களில் டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் (மதுஒழிப்பு பிரிவு) அங்கு பணி நீட்டிப்பு செய்ய முடியாது. இதில் 9 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் சில போலி மதுபான தயாரிப்பாளர்களிடம் நேரடி மாமுல் ஒப்பந்தம் வேறு. இதில் தான் அண்மையில் மணிகண்டத்தில் பிடிக்கப்பட்ட மதுபானம் தயாரிப்பாளர்கள்
கூடுதலாக மாமுல் கேட்டு தராததால் தனது பராக்கிரமத்தைக் அவர்களிடம் காட்டி விட்டார் என்று மது ஒழிப்புப் பிரிவு போலீசார் புலம்புகின்றனர். தற்பொழுது அசட்டையாக இருந்த மது ஒழிப்பு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் நடவடிக்கையிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டுமென்றால் கப்பம் கட்டவேண்டும் என்றும் ரகசிய வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசார் புலம்பி வருகின்றனர். இப்படி வசூல் ராணியாக மத்திய மண்டலத்தில் வலம் வரும் இன்ஸ்பெக்டர் சுஜாதா இதுவரை ஒரு சியை தொட்டுவிட்டதாக மத்திய மண்டல மது ஒழிப்புப் பிரிவு போலீசார் கணக்கு சொல்கின்றனர்.
மனைவி இன்ஸ்பெக்டர் பதவியை வைத்துக் கொண்டே கோடீஸ்வரி ஆகும் பொழுது கணவன் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார் டிஎஸ்பி பதவியை வைத்துக்கொண்டு சும்மாவா இருப்பார்? டிஎஸ்பி சுரேஷ்குமார் டிஎஸ்பி ஆக மூன்று ஆண்டுகளுக்கும் மேலே பதவி வகித்து வருகிறார். இதே உட்கோட்டத்தில் நவல்பட்டு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகவும், துவாக்குடி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகவும் பதவி வகித்தவர். ஏறக்குறைய துவாக்குடி நவல்பட்டு திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள கஞ்சா, கள்ள லாட்டரி, பான்மசாலா போதை பாக்குகள், மதுபான
விற்பனையாளர்கள் ஆகியோரிடம் நேரடி தொடர்பு உள்ளவர். இவர்களிடம் வாரந்தோறும் மாமூல் வசூல் செய்து இவருக்கு கொடுத்து வருபவர் திருவெறும்பூர் உளவுப்பிரிவு எஸ்.ஐ. மனோகரன் கனகச்சிதமாக செய்து கொடுத்து வருகிறார். இவரும் திருவெறும்பூர் துவாக்குடி பிஎச்இஎல் ஆகிய மூன்று காவல் நிலையங்களில் கடந்த 15 ஆண்டுகளாக உளவுப்பிரிவு போலீஸாராக வலம் வந்து வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இவர் சட்ட விரோத செயல்களை மாவட்ட காவல்துறைக்கு உளவு சொல்கிறாரோ? இல்லையோ? தனக்கு பிடிக்காத போலீசாரை போட்டுக் கொடுப்பதில் கில்லாடி என்று இன்ஸ்பெக்டர்களே புலம்புகின்றனர். இப்படி திருவெறும்பூர் பகுதியில் கணவன், மனைவி டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் ஆகிய பதவிகளை கொண்டு கோடிகளில் புரண்டு வருவது பல காவல் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் இது மாதிரி கருப்பு ஆடுகளை களைய வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.