புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள விட்டமாபட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் வயது 48. கட்டிட தொழிலாளியான இவர் தினசரி திருச்சிக்குச் சென்று கட்டிட பணி செய்வது வழக்கம். அதேபோல் இன்று திருச்சிக்கு வேலைக்கு சென்ற நிலையில் அங்கு பணி இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அங்கு வந்த பெண் மற்றும் ஆண் ஆகிய இருவர் தாங்கள் கணவன் மனைவி என்றும் தாங்களும் கட்டிட வேலையாட்கள்தான் என்று தெரிவித்ததோடு, சின்னம்மாளுக்கு வேலை தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி சின்னம்மாளுக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் தண்ணீரை குடித்த சின்னம்மாள் மயங்கி விடவே அவரிடம் இருந்த ஒன்றரை சவரன் நகையை திருடிக்கொண்டு சின்னம்மாளை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். மயக்கம் தெளிந்த மூதாட்டி எழுந்து பார்த்த போது தன்னை அழைத்து வந்தவர்கள் நகையை திருடிக்கொண்டு மாயமாகிவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மயக்க நிலையில் இருந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். சின்னம்மாளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நூதன திருட்டில் ஈடுப்பட்டவர்களை மணப்பாறை போலீசார் தேடி வருகின்றனர்.