“உலகம் முழுவதும் பரதநாட்டிய கலையை வளர்க்கணும்” – திருச்சி மாவட்டத்தின் “கலை இளமணி” விருது பெற்ற மாணவி!

0 852
Stalin trichy visit

பரதநாட்டியம் என்பது ஒரு கலை மட்டும் கிடையாது, அது மிகப்பெரிய ஒரு ஊடகம். தங்களுடைய முகபாவங்களையும், கைகளும், கால்களின் நுணுக்கங்களில் மூலம் கற்றறியும் ஒரு கலை. புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், தில்லானா என காதில் விழும் ஜதிக்கு ஏற்றபடி கால்களின் அசைவு ஒருபக்கம், கைகளின் அசைவுகளுக்கு ஏற்றபடி கண்ணின் அசைவு மறுபக்கம் என சாதாரணமானவர்களுக்கே இது சவாலான கலை இது!

இந்த இறைவனின் அருட்கொடை அனைவருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. கலையின் மீது ஆர்வமும், நுணுக்கமும் தெரிந்து, கலைக்காகவே வாழ்பவர்களுக்கு தான் கிடைக்கும் ஒரு அற்புத பரிசு தான் இது. தன்னுடைய 19வது வயதில் திருச்சி மாவட்டத்தின் இளம் கலைமணி விருதைப் பெற்றவர் இவர். நாட்டியச்சுடர், நாட்டிய மங்கை, நாட்டிய சிகாமணி, எம்.ஜி.ஆர் விருது என தன்னுடைய 19 வயதிற்குள் கலைகளுக்காக வாழும் இளம் கலைஞர் இவர்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் அபிநயா. பெற்றோர்களான அம்பலம் – வனிதா ஆகியோரின் ஒத்துழைப்போடு நாட்டியக் கலையில் பல்வேறு தடங்களைப் பதித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் வணிகவியல் துறையில் 2ம் ஆண்டு வணிகவியல் படித்து வருகிறார். திருச்சி மாவட்டத்தில் கலைகளில் சிறந்து விளங்கும் 5 கலைஞர்களுக்கு வயது மற்றும் கலைப்புலமை அடிப்படையில் விருது வழங்கப்பட்டது. அந்த ஐவருள் ஒருவராக கலை இளமணி விருதினை அபிநயா பெற்று நாட்டிய கலைக்கும், திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.


இதுகுறித்து கலை இளமணி விருது பெற்ற அபிநயா கூறுகையில்…. “ஸ்ரீரங்கத்தில் பரதநாட்டியாலையா நடத்திவரும் என்னுடைய பயிற்சியாளர் கலைமாமணி ரேவதி முத்துசாமி தான் எனக்கு ரோல் மாடல். அவர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் தான் பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலைகளில் என்னால் சிறந்து செயல்பட முடிந்தது‌. முதல்முதலாக 5ம் வகுப்பு படிக்கும்போது நடனமாடத் தொடங்கினேன். அப்போது என்னை பலரும் பாராட்டியதால் 9 வருடங்களாக தொடர்ந்து நடனம் ஆடி வருகிறேன்.‌ என்னுடைய பெற்றோரின் ஒத்துழைப்பும், என்னுடைய பயிற்சியாளரின் ஒத்துழைப்பால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று பரதநாட்டியம் ஆடியுள்ளேன். சமீபத்தில் ராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய அளவிலான பரதநாட்டிய போட்டியிலும் கலந்து கொண்டேன்.

நாட்டுப்புற கலைகளில் தலையில் கரகம் வைத்து ஆடுவது, கிளாஸ் மீது ஏறி நின்று ஆடுவது என வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறேன். வருங்காலங்களில் நடன ஆசிரியராக ஆக வேண்டும் என்பது என்னுடைய கனவு. நான் கற்றுக் கொண்ட இந்த கலையை உலகம் முழுவதும் உள்ள பலரும் கற்றறிய வேண்டும். பரதநாட்டியக் கலை தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் சென்றடைய வேண்டும்.

நான் இப்போது படிக்கும் தேசிய கல்லூரியிலும் எனக்கு முழு ஒத்துழைப்பை என்னுடைய ஆசிரியர்கள் வழங்கி வருகிறார்கள். தொடர்ந்து எங்களது வணிகவியல் துறையிலும் என்னை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நிச்சயமாக பரதநாட்டியத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நான் தொடர்ந்து முயற்சித்து வருவேன்” என்றார்.

மேலும் இது குறித்து வணிகவியல் துறை தலைவர் டாக்டர் K.குமார் கூறுகையில்… “வணிகவியல் துறையில் படிக்கும் எங்களது பிள்ளைகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருகிறோம். அவர்களின் ஒவ்வொரு திறமைகளையும் கண்டறிந்து அவர்களுக்கு எங்கள் துறை சார்பாக எங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். பரதநாட்டியத்தில் விருதுபெற்ற அபிநயா உட்பட அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறோம். அவர்களின் பயிற்சி காலகட்டங்களில் படிப்பதற்கு ஏதுவாக அத்தனை திட்டங்களையும் நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம்” என்றார்.

 

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/Lsr0mGx2BtcHISoYvuFdGy

Leave A Reply

Your email address will not be published.