“வாகன ஓட்டிகளுக்கு திருச்சி போலீசார் எச்சரிக்கை” கண்டிப்பாக வழக்கு பதிவு செய்யப்படும்!
திருச்சி மாநகரில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்வது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, ஒருவழிப்பாதையில் (ஒன்வே) பயணம் செய்வது உட்பட போக்குவரத்து விதிகளை மதிக்காததால் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக தெரிய வருகிறது. இதன் அடிப்படையில் வரும் காலங்களில் விதிமீறல் தொடர்பான வழக்குகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், திருச்சி மாநகரில் கடந்த 2019ம் ஆண்டு 530 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 36 பேர் இறந்துள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு 390 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 41
பேர் வரை இறந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு 400 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 31 பேர் இறந்துள்ளனர். மேலும் மக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கியதன் பேரில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மது போதையில் வாகனம் ஓட்டியதாக 200 வழக்குகள் வரை பதிவாகியுள்ளன. வாகன நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து
விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். சமீபத்திய ஆண்டுகளில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் விபத்துகள் குறைவு தான். ஆனால் கடந்த சில மாதங்களாகவே போலீசார் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் குறித்து வழக்குப்பதிவதில் கெடுபிடி காட்டவில்லை. ஆனால் வரும் காலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் வழக்கு அதிக அளவில் பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.