40 ஆயிரம் கடன் வாங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்க கிளம்பிய திருச்சி இளைஞர் – உதவிக்காக காத்திருந்து ஏமாந்த குடும்பம்!
விளையாட்டுகள் என்பது நம் வாழ்வோடு ஒன்றிணைந்த ஒன்று. தடகளமோ, குழு விளையாட்டோ ஏதாவது ஒன்றில் நாம் அனைவருமே சிறந்து விளங்க கூடியவர்கள் தான். விளையாட்டு ஒன்றை மட்டுமே நம்பி 40 ஆயிரம் ரூபாயை தன்னால் இயலும் முடியாத சூழ்நிலையிலும் வேறு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு கடன் வாங்கி பூடான் நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடப்போகும் இளைஞரின் கதை இது !!

திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் ஷாகுல் ஹமீது(21). சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான ஊரக போட்டியில் கலந்துகொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளார். 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசு பெற்று அடுத்து சர்வதேச அளவிற்கு தேர்வாகி வரும் ஆறாம் தேதி நேபாளத்தில் நடைபெறும் தெற்காசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்காக விளையாட கிளம்பிவிட்டார்…

சிறு வயதிலேயே தந்தையை இழந்த இவர் விடாமுயற்சி ஒன்றை மட்டும் கையில் வைத்துக்கொண்டு லால்குடி அருகே உள்ள அரசு கல்லூரியில் படித்து அவருடைய தாய் சமீம் அரவணைப்பில் இன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
இதுகுறித்து ஷாகுல் ஹமீதை தொடர்பு கொண்டு பேசினோம்…. “அப்பா சின்ன வயசிலேயே இறந்திட்டாங்க. அம்மாதான் ஃபுல் சப்போர்ட் பண்ணி என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்தாங்க… அரசு கல்லூரியில் படிக்கும்போதே லால்குடி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் சேர்ந்து தினமும் பயிற்சி பெற்று வந்தேன். என்னுடைய பயிற்சியாளர் ராமச்சந்திரன் தான் இதற்கு காரணம். தினமும் என்னை ஊக்கப்படுத்தி இவ்வளவு தூரம் நான் சென்றதற்கு அவர் தான் காரணம்.

தற்போது நான் நேபாளம் நாட்டிற்கு கிளம்பி உள்ளேன். எனக்கு வரும் 6ம் தேதி நீளம் தாண்டுதல் போட்டி உள்ளது. இதற்காக ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய் கேட்டு இருந்தார்கள். இவ்வளவு பெரிய தொகையை என்னால் நிச்சயமாக கிடைக்க முடியுமா என சந்தேகம் இருந்தது. இருப்பினும் என் தாயார் மற்றும் பலரின் முயற்சியால் தற்போது 40 ஆயிரம் ரூபாயை கடன் வாங்கிக்கொண்டு கிளம்புகிறேன். நிச்சயம் இந்தியாவிற்காக தங்கம் வெல்வேன்” என்றார்
மேலும் இது குறித்து அவர்களின் தாயார் கூறுகையில்…”வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். தற்போது என் பையன் இந்தியாவிற்காக விளையாடப் போகிறான் பெருமையாக இருக்கிறது. இந்திய அளவில் தங்கப்பதக்கம் வென்ற போதிலிருந்தே 40 ஆயிரம் ரூபாய்க்காக காத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் இறுதியில் எந்தவித உதவியும் கிடைக்காததால் என்னால் முடிந்த தொகையை தற்போது கடனாக வாங்கி அவனை அனுப்புகிறேன். எங்களுக்கு அரசாங்கம் மற்றும் யாராவது உதவி கரம் நீட்டினார் நிச்சயமாக தங்கத்தோடு என் பையன் திரும்புவான்” என்றார்
குடும்பத்தின் நிலைமை ஒருபுறம் இருந்தாலும் விடா முயற்சி ஒன்றை மட்டுமே விடாது பிடித்துச் செல்லும் இதுபோல் இளைஞர்கள் கண்டிப்பாக உச்சத்தை அடைவார்கள் என்பதே நிதர்சனம். மேலும் இந்த சாதனை இளைஞர்களுக்கு துணைபுரிய நீங்கள் விரும்பினால் 9626054869 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பேசிலாம்…
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறியhttps://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA
