அமைச்சர் அன்பில் மகேஸ் மீது களங்கம் கற்பிக்க முயற்சிப்பதா : பா.ஜ.க.வுக்கு ஆதாரப்பூர்வ பதிலடி
திருச்சி மாநகராட்சி வார்டு எண் 45 உள்ள காருண்யா நகரில் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை காருண்யா நகர் விஸ்தரிப்பு பகுதியில் இல்லாத போது அந்தப் பகுதியில் குடிநீர் வசதிக்காக ரூ.9.5 லட்சம் ஒதுக்கப்பட்டதாக கல்வெட்டு மட்டும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது,ஆனால் அப்பணி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை, ரூ.9.5 லட்சம் யாருக்கு போனது என்பதும் தெரியவில்லை.
அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பத்திரிக்கையாளர்களுக்காக போட்டோ ஷூட் மட்டும் நடத்துகிறார்.மேலும் உதயாநிதி ரசிகர் மன்ற அமைச்சராக தான் செயல்படுகிறார். மக்கள் பணிகளை கண்டு கொள்வதே இல்லை என்று திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.சீத்தாலட்சுமி ஆதாரப் பூர்வமாக விளக்கமளித்து பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூர், சட்டமன்ற உறுப்பினருமான “அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் அன்றாடம் மக்களுக்காக ஆற்றிவரும் பணியையும், அவருடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பாரதிய ஜனதா கட்சியினர் காருண்யா நகரை வைத்து அரசியல் செய்து வருகின்றனர்.
காருண்யா நகர் 2011ஆம் ஆண்டிற்கு பிறகே, விஸ்தரிப்பு பகுதியாக உருவாகியது. மொத்தம் 73 குடியிருப்புகள் மட்டுமே உள்ள, இந்த பகுதியில் மக்களுக்கு அடிப்படை தேவையான, குடிநீர் மற்றும் தெரு விளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு பொன்னேரிபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து சுமார் 2கி.மீ. தூரம் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2019-2020 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.50லட்சம் ஒதுக்கப்பட்டு பணி நிறைவு செய்து மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் புதைவடிகால் பணி நடைபெற்று வருகிறது, அப்பணி முடிந்தபின் சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். இப்பகுதியில் இதுவரை செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்த தெளிவான விளக்கத்தின் நகழ் இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளார்.
