உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணி மும்முரம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான மாகாளிகுடியிலுள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சிதிலமடைந்து இருந்தது. இதனை சீரமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் மற்றும் அந்த கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியினை மேற்கொள்வதற்காக கோவில் நிதி ரூ.40½ லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குளத்தை சீரமைக்கும் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அந்த சமயத்தில் பெய்த மழையினால் தெப்பக்குளத்தில் நீர் தேங்கியதால் சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்தநிலையில், தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றப்பட்டு தெப்ப குளத்தை தூர்வாரி, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.