சாலையை புதுப்பித்து தர கிராம மக்கள் கோரிக்கை
திருச்சி, ஜன.20 திருச்சி மாவட்டம், தா .பேட்டை ஒன்றியம் தும்பலம் கிராமத்தில் இருந்து வெள்ளாளப்பட்டி செல்லும் தார் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தா .பேட்டை ஒன்றியத்தில் வெள்ளாளப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. தா .பேட்டையில் இருந்து முசிறி செல்லும் சாலையில் தும்பலம் கிராமத்தில் இருந்து கிளை சாலை வழியாக வெள்ளாளப்பட்டி கிராமம் மற்றும் சொரியம்பட்டி அருகே துறையூர் மெயின் ரோட்டை அடையும் வகையில் தார் சாலை அமைந்துள்ளது. இந்த தார் சாலை தற்போது மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் காணப்படுவதால் பொதுமக்கள் தார் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தும்பலம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறும் போது தும்பலத்தில் இருந்து வெள்ளாளப்பட்டி கிராமத்திற்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.சாலை பல இடங்களில் மேடு பள்ளமாக இருப்பதுடன் ஆங்காங்கே பெயர்ந்து போன நிலையில் ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கிறது.இந்த சாலையில் தனியார் வேளாண் கல்லூரி அமைந்துள்ள நிலையில் முக்கிய விஐபிகள் வரும்போது பஞ்சர் ஓட்டும் பணி பார்க்கப்படுகிறது.
குறிப்பாக விவசாயிகள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் துறையூர் முசிறி மெயின் ரோட்டை அடைவதற்கு இந்த சாலை மிகவும் பிரதானமானது. எனவே தும்பலம் கிராமத்தில் இருந்து வெள்ளாளப்பட்டி செல்லும் தார் சாலையை புதுப்பித்து சாலையாக அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.