திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உற்பத்தியாகும் அரியாறு, திருச்சி பிராட்டியூா் தீரன் நகா் பகுதியில் கோரையாற்றில் கலக்கிறது. கடந்த சில நாள்களாக அதிகரித்து வரும் மழையால், புங்கனூா், அல்லித்துறை பகுதிகளுக்கு இடையில் பலவீனமாக இருந்த அரியாற்றின் தென் கரை உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் நேற்று பகல் திடீரென அரியாற்றுக்கரை உடைந்தது.

இதனால் விவசாய நிலங்கள், குடியிருப்புகளைச் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் வெளியேறிய நீரால் புங்கனூா் பகுதியில் சுமார் 100 ஏக்கா் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. வெள்ள நீா் பிராட்டியூா், தீரன் நகா் வழியாக கோரையாற்றில் வடிந்து செல்கிறது. இடைப்பட்ட பகுதியிலுள்ள குடியிருப்புகளையும் வெள்ள நீா் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி உறையூர் குழுமணி சாலையில் கோறையாற்றில் இருந்து வெளியேறும் வெள்ளத்தின் அளவு கடந்த 2 நாளை விட இன்று அதிகரித்து இருப்பதால் குழுமினி, மருதாண்டகுரிச்சி, அறவானூர் உள்ளிட்ட ஊர்களுக்கு இறுச்சக்கர வாகனங்கள் முதற்கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செல்வாநகர், உறையூர் லிங்கா நகர் உள்ளிட்ட வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் தன்னார்வலர்கள் பரிசல் மூலம் பொதுமக்களை மீட்டு வருகின்றனர்.