திருச்சி மாவட்டம் என்றாலே கோவிலுக்கு பெயர் போனது. குறிப்பாக தீவு போல் அமைந்திருக்கும் ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ரங்கநாதர் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்- அகிலாண்டேஸ்வரியை காண அகிலம் முழுவதும் உள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்சி மாநகரை நோக்கி வந்து கொண்டேதான் இருக்கின்றன.

“தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்” என்பார்கள். இந்த அன்னதானத்தால் எத்தனையோ ஏழை- எளியோர்கள் தினந்தோறும் பயனடைந்து வருகின்றனர். மன அமைதிக்காக கோவிலுக்கு சென்று சிறிது நேரம் கழித்து அங்கு உள்ள பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு விட்டும் இறைவனை வழிபட்டு செல்வார்கள். ஆனால் திருவானைக் கோவில் பிரசாதத்தின் விலையை கேட்ட உடனே நல்லா இருக்கும் மன அமைதி கூட காணாமல் போய் விடுகிறது!
பஞ்சபூத ஸ்தலங்களில் நீருக்கூரிய ஸ்தலமாக இருப்பது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரன்- அகிலாண்டேஸ்வரி திருத்தலம் ஆகும். இந்த கோவிலில் ஆடி மாதம் உலகநாயகி அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க திருச்சி சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் சாரை, சாரையாக வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் பிரசாதத்தை விரும்பி வாங்குவதுடன் வீட்டில் உள்ளவர்களுக்கும் வாங்கி செல்வர். ஏனெனில் பிரசாதத்தின் சுவை அந்த காலத்தில் இருந்தே அறுசுவையாகிய ஒன்றாக இருந்து வருகிறது.

தற்பொழுது ஆடி மாதத்தில் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் இரண்டு இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் புளியோதரை, சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதம் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் பிரசாதத்தின் அளவை மதிப்பிடும் பொழுது நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை கேட்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
குறிப்பாக மிக சிறிய பாக்சில் அடைக்கப்பட்ட புளியோதரை ரூ.40 எனவும், சர்க்கரை பொங்கல் ரூ.40 எனவும், வடை ரூ.10 எனவும் மிக அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேதனையளிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. பல பக்தர்கள் முணுமுணுத்துக் கொண்டு அதே இடத்தில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து செல்கின்றனர்.
மேலும் இதே அளவுள்ள பிரசாத பொருட்கள் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட ஏனைய கோவில்களில் ரூ.15 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தனைக்கும் திருவானைக்காவல் கோவிலில் பிரசாதத்தை கோவில் நிர்வாகமே நேரடியாக விற்பனை செய்து வருகிறது. ஆனால் மற்ற கோவில்களில் வெளி நபர்களுக்கு பிரசாத ஸ்டால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஆனால் பிரசாத ஸ்டாலை ஏலத்தில் எடுத்தவர்கள் கூட தங்களது லாபத்தை குறைத்து கொண்டு குறைந்த விலையில் விற்கும் பொழுது திருவானைக்காவல் கோவில் நிர்வாகம் பிரசாதத்தில் கொள்ளை லாபம் சம்பாத்திக்க நினைப்பது தர்மத்திற்கு எதிராக உள்ளது.
இந்த பிரசாத பொருட்களுக்கு பில், டோக்கன் உள்ளிட்ட எதையும் பிரசாதம் வாங்கும் பக்தர்களுக்கு திருவானைக்கோவில் கோவில் நிர்வாகம் வழங்குவது இல்லை. அப்புறம் எப்படி பிரசாத விற்பனை தொடர்பான முறையான கணக்கு பரமாரிக்க முடியும்…? என்ற கேள்வி பல தரப்பினர் எழுப்பி வருகின்றனர்.

திருச்சி மாவட்ட மநீம பொருளாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார்
பிரசாத ஸ்டாலில் விலை பட்டியல் இல்லை. கோவிலில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என உத்தரவிட்டு போர்டு வைத்துள்ள கோவில் நிர்வாகமே, பிளாஸ்டிக் பாக்சில் தான் பிரசாதங்களை விற்பனை செய்வது கூடுதல் வேதனையாக இருக்கிறது… இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார் கூறுகையில்… “ஆடி வெள்ளியை முன்னிட்டு எங்கள் குடும்பத்தோடு திருவானைக்காவல் கோவிலுக்கு சென்றோம். அங்கு பிரசாதத்தின் விலையை கேட்ட உடனேயே அதிர்ச்சி அடைந்தேன். குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் 15 ரூபாய்க்கு கொடுக்கும் பிரசாதம் இங்கு 40 ரூபாய்க்கு சிறிய அளவில் கொடுப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. கோவில் நிர்வாகம் ஏழை எளியோர் வாங்கி சாப்பிடும் பிரசாதத்தில் தான் காசு பார்க்க வேண்டுமா? இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

திருச்சியில் உள்ள பிரபல ஹோட்டல்களில் கூட இந்த அளவுதான் புளியோதரையின் விலை இருக்கிறது. அதனை மிஞ்சும் அளவிற்கு திருவானைக்கோவில் நிர்வாகம் செய்து வருவது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே உடனடியாக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர், ஆணையர் மற்றும் கோவில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏழைகளுக்கு எட்டா கனியாக உள்ள திருவானைக்காவல் கோவில் பிரசாதத்தின் விலையை குறைக்க மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8