காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு 11/2ஆண்டு சிறை….
காசோலை மோசடி வழக்கில் பெண்ணுக்கு 11/2ஆண்டு சிறை தண்டனை விதித்து லால்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் முத்தமிழ்செல்வன். இவரிடம். பெருவளநல்லூர் கிராமத்தை சேர்ந்த சேகரின் மனைவி தனக்கொடி தனது நிலத்தை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முத்தமிழ்செல்வனிடம் இருந்து முன்பணமாக ரூ.12 லட்சத்தை தனக்கொடி பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. ஆனால், நிலத்தை முத்தமிழ்செல்வனுக்கு கிரையம் செய்து கொடுக்காமல் தனக்கொடி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து தளக்கொடியிடம் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு முத்தமிழ்செல்வன் கேட்டுள்ளார். இதையடுத்து முத்தமிழ்செல்வனுக்கு, தனக்கொடி ரூ.12 லட்சத்திற்கு சோலை வழங்கியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காட்டூரில் உள்ள ஒரு வங்கியில் அந்த காசோலையை முத்தமிழ்செல்வன் செலுத்தியபோது, தனக்கொடியின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்பது தெரியவந்தது.
இது குறித்து முத்தமிழ்செல்வன். லால்குடி குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கோர்ட்டில் 8 ஆண்டாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ராஜ்குமார் தீர்ப்பளித்தார். அதில், காசோலை மோசடி செய்த தனக்கொடிக்கு 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்தும், காசோலை தொகை ரூ.12 லட்சத்தை இன்னும் 4 மாதங்களுக்குள் கொடுக்க தவறும்பட்சத்தில், மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.