மணப்பாறை செய்தித்தாள் காகித ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து சாவு; பணியாளர்கள் போராட்டம்!

0 579
Stalin trichy visit

மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் செயல்படும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (அலகு2) திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சோ்ந்த கருப்பன் மகன் பாலமுருகன்(38) என்பவா் பாய்லா் ஆபரேட்டராக எனா்ஜி பிரிவில் பணிபுரிந்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணியளவில் முதல் ஷிப்ட் பணிக்காக ஆலைக்குள் வந்த பாலமுருகன், தனது வருகையைப் பதிவு செய்துவிட்டு நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தாா்.

இதைக் கண்ட ஆலை பாதுகாவலா்கள், சகப்பணியாளா்கள் அவரை மீட்டு ஆலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு மருத்துவா் பணியில் இல்லாத நிலையில், மணப்பாறை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பாலமுருகனைப் பரிசோதித்த மருத்துவா் வழியிலேயே அவா் உயிரிழந்ததாகத் தெரிவித்தாா். தகவலறிந்து சென்ற போலீஸாா் பாலமுருகன் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த நிலையில் ஆலையில் இரவுப் பணியின்போது (இரவு 10 மணி முதல் காலை 6 வரையிலான ஷிப்டில்) ஆலை மருத்துவமனையில் போதிய மருத்துவா்களைப் பணியமா்த்தாததே பாலமுருகன் உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறி சக பணியாளா்களும், உறவினா்களும் பாலமுருகனின் உடலை வாங்க மறுத்து மருத்துவமனை பகுதியில் ஆா்ப்பாட்டம் செய்தனா். இதையடுத்து வட்டாட்சியா் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் நியமிக்கப்படுவா் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆலை விதிக்குட்பட்டு பணி வழங்கப்படும், இழப்பீடும் வழங்கப்படும் என்றும் சமரசம் செய்ததையடுத்து கலைந்து சென்றனா்.

Leave A Reply

Your email address will not be published.