திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் அவலம்
திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1569 நபர்களுக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 10 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை337 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 7482பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 509 சாதாரண படுக்கையும், 275 ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கையும் 60 வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை என மொத்தம் 844 படுக்கைகள் உள்ள நிலையில் 30 சாதாரண படுக்கைகள் தவிர மீதம் உள்ள 814 படுக்கைகள் நிரம்பி விட்டது.இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துறையூர் பகுதியை சேர்ந்த இருவர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை காலியாக இல்லாததால் ஆம்புலன்சிலேயே படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.நேற்றுவரை திருச்சி மாவட்டத்தில் படுக்கைகள் போதிய அளவில் இருந்த சூழலில் நேற்று மட்டும் 1569 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சிலேயே நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், தற்போது 30 சாதாரண படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளது.தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜனுடன் கூடிய கூடுதல் படுக்கைகள் தேவைப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.