திருச்சி மாநகராட்சி தேர்தல் எப்போது? மாநகராட்சி விரிவாக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு
தமிழகத்தில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. சென்னை, கோவை மாநகராட்சிகளுக்கு அடுத்த நிலையில் வரி வருவாய் அதிகம் தரும் மாநகராட்சி திருச்சி. 1994ம் ஆண்டு ஜூன் 1ந்தேதி திருச்சி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.அப்போது திருச்சி மாநகராட்சியுடன் ஶ்ரீரங்கம் நகராட்சியும், சில பஞ்சாயத்து பகுதிகளும் இணைக்கப்பட்டு 60 வார்டுகளுடன் திருச்சி மாநகராட்சி உருவானது.அதன்பிறகு 2011ம் ஆண்டு திருவெறும்பூர் பகுதியிலுள்ள சில பஞ்சாயத்துகளை சேர்த்து 65 வார்டுகளாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதிநிலையை செம்மைப்படுத்த, வருவாயை உயர்த்த, அதிமுக அரசு விட்டுச்சென்ற ரூ. 6 லட்சம் கோடி கடனிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க பல திட்டங்களை வகுத்துள்ளார்.அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதிகளை விரிவுபடுத்துதல், தகுதி வாய்ந்த பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது போன்றவை முக்கிய திட்டமாகும்.அந்த வகையில் தற்போது 65 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் திருச்சி மாநகராட்சி 100 வார்டுகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்காக திருவெறும்பூர் பகுதியிலுள்ள சில பகுதிகளும், திண்டுக்கல் சாலை, புதுக்கோட்டை சாலை, கரூர் சாலை, வயலூர் சாலைகளில் பல கிராமங்கள் மாநகராட்சியுடன் இணைக்கப்படவிருக்கிறது.இது தொடர்பாக கடந்த வாரம் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.திருச்சி மாநகராட்சியைப் போல தமிழகத்திலுள்ள இதர 14 மாநகராட்சிகளும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.2011ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 5 வார்டுகளிலும் இதுவரை மாநகராட்சிக்கான எந்த வளர்ச்சிப்பணிகளும் நடைபெறவில்லை.அதிமுக ஆட்சி கடந்த 10 வருடங்களாக இந்த 5 வார்டுகளையும் கண்டுகொள்ளவே இல்லை.அடிப்படை தேவைகளான சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி போன்றவை கூட இந்த 5 வார்டுகளிலும் செய்யப்படவில்லை இந்நிலையில் தங்கள் பகுதியில் மேலும் பல கிராமப் பஞ்சாயத்து பகுதிகளை இணைக்க அந்த பகுதி மக்கள் விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.அத்துடன் திருவெறும்பூர் பகுதியிலுள்ள 3 பெரிய தொழிற்சாலை பகுதிகளையும் மாநகராட்சிக்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகங்களும் இதனை விரும்பவில்லை என்றே தெரிகிறது.ஆனாலும் விரைவில் கூடும் சட்டசபை கூட்டத்தொடரில் மாநகராட்சி விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாநகராட்சி, நகராட்சி பகுதிகளை விரிவாக்கம் செய்த பின் தான் அதற்கான தேர்தல் நடத்தப்படும். இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை நடத்துவதற்காக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.கொரோனா தொற்றின் அலை ஓய்ந்ததும் மாநகராட்சி, நகராட்சி தேர்தல் நடத்தப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் மாநகராட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது.