திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேதமடைந்த எம்ஜிஆர் சிலை சீரமைக்கப்பட்டது.
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை பகுதியில் சேதமடைந்த எம்ஜிஆர் சிலை சீரமைக்கப்பட்டது.திருச்சி மரக்கடை பகுதியில் 1995 ஆம் ஆண்டு, திருச்சி மாநகர எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில்.. மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய திருவுருவச் சிலை நிறுவப்பட்டது.அப்போதைய அமைச்சர்கள் ஆர்.எம். வீரப்பன், நல்லூசாமி ஆகியோர் இந்த சிலையை திறந்து வைத்தனர்.கடந்த 26 ஆண்டுகளை கடந்து கம்பீரமாகவும் மக்களுக்கு அடையாளச் சின்னமாகவும் விளங்கிய எம்.ஜி.ஆர் திருவுருவச்சிலையின் வலது கை மணிக்கட்டு வரை உடைந்திருந்தது.இதனையறிந்த திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் அதிமுகவினர், சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி காந்தி சந்தை காவல்நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.மிகவும் பரபரப்பான பகுதியான மரக்கடை பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்காக மூடி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் சிலையை மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மீண்டும் திறக்க முற்பட்ட போது கவனக்குறைவால் எம்ஜிஆர் சிலையின் கை உடைந்து விழுந்தது கண்டறியப்பட்டது.இதன் காரணமாக, மரக்கடை எம்ஜிஆர் சிலை அரசு சார்பில் புனரமைக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்திருந்தார்.மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் புனரமைப்பு பணி திருப்திகரமாக இருக்காது என்பதால், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில், திருச்சி திருவானைக்காவல் ஸ்தபதி பிரசாத் தலைமையில் சிலை வடிவமைக்கும் சிற்பிகளால் சிலையின் கைகளை புதிதாக அமைக்கும் பணி இன்று காலை நடைபெற்றது.இப்பணியினை, அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர்..சிலையின் சிதிலமடைந்த பகுதிகளும் சீரமைக்கப்பட்டு ஓரிருநாளில் புதிதாக வர்ணம் பூசும் பணி நடைபெறும் என தெரிவித்தார். மேலும், திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு புதிதாக கூண்டு அமைக்கும் பணி துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.