ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா : பக்தர்கள் இன்றி நடந்தது
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர்த்திருவிழா பக்தர்களுக்கு அனுமதி இன்றி கோயில் வளாகத்திலேயே கொண்டாடப்படுகிறது .திருநாளை முன்னிட்டு நாள்தோறும் நம்பெருமாள் யானை வாகனம், குதிரை வாகனம், யாழி வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் வலம் வந்தார்.முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற வேண்டிய சூழலில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தேரோட்டம் இல்லாமல் நம்பெருமாள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கிளி மாலையுடன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் வலம் வந்தார்.