நிறுத்தியிருந்த லாரியில் கொள்ளையடித்த 3 பேர் கைது
திருச்சி, ஜூலை 8 திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்கில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் அசந்து தூங்கிய போது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் சிவராஜா. இவர் சென்னையில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் கடந்த 5 வருடமாக ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். லாரி உரிமையாளரின் நம்பிக்கைக்கு உரியவரான ஓட்டுநர் சிவராஜா சென்னையில் இருந்து திருச்சிக்கு ரெகுலராக லோடு ஏற்றி சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னையில் இருந்து ஈச்சர் லாரியில் வாகன உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த 23 ஆம் தேதி இரவு திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் இரவு 12 மணிக்கு மேல் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி உள்ளார். பின்னர் காலையில் லாரி எடுத்துக்கொண்டு திருச்சிக்கு சென்று கம்பெனியில் லாரி நிறுத்திவிட்டு மேனேஜரிடம் சொல்லிவிட்டு கிளம்பி உள்ளார். அப்போது மேனேஜர் லாரியை சோதனை செய்த போது லாரியில் இருந்த 49 அட்டைப்பெட்டியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வாகன உதிரி பாகங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து லாரி ஓட்டுநர் சிவராஜாவிடம் கேட்டபோது லாரி எங்கேயும் நிறுத்தவில்லை. வழக்கமாக நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி விட்டு வந்தேன் என கூறியுள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் லாரி கம்பெனியின் பணியாளர் குமரகுரு புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுகனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில் திருடிய பொருட்களை சென்னையில் உள்ள ஒரு கடையில் பாதி விலைக்கு மூன்று பேர் விற்க முயன்றனர். அப்போது கடைக்காரர் உதிரி பாகங்களுக்கு உரிய பில் கேட்டுள்ளார். அதில் மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கடைக்காரர் இது குறித்து அப்பகுதி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அப்பகுதி காவல்துறையினர் மூன்று பேரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் திருச்சி சிறுகனூரில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரி நிறுத்தி இருந்தபோது மற்றொரு லாரி மூலம் உதிரிபாகங்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவின் பேரில் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் வழிகாட்டுதல்படி சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் காவல்துறையினர் மூன்று பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் முத்து (45), கள்ளக்குறிச்சி சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் அருள்குமார் (19), சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேலு மகன் ஸ்ரீதரன்(19) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது, மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான தாத்தா பேபி அலெக்ஸ் மற்றும் உதிரி பாகங்களை திருடி எடுத்துச் சென்ற லாரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரூ.20 லட்சம் மதிப்புள்ள 49 அட்டைப் பெட்டிகளில் திருடிச் சென்ற உதிரி பாகங்களில் 39 அட்டைப்பெட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர் .பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் காவல்துறையினர் அவர்களை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.