4 வயது குழந்தை வாய்க்காலில் விழுந்து சாவு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேலகார்த்திகைப்பட்டி சுக்காம்பட்டி குடித்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மகன் இஷாந்த்(4). சிறுவன் அப்பகுதியில் உள்ள முள்ளிப்பாடி வாய்க்கால் அருகே இஷாந்த் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சிறுவன் இஷாந்தை அக்கம் பக்கத்தினர் வாய்க்காலில் இறங்கி மீட்டு தொட்டியத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவன் இஷாந்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் இஷாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவர்களுடன் விளையாடியபோது வாய்க்காலில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.