900 லிட்டர் எண்ணை, 100 கிலோ எடை கொண்ட 600 மீட்டர் பருத்தி துணி – திருச்சி மலைக்கோட்டை மகாதீபம்!

0 330
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் திருக்கார்த்திகையையொட்டி மலைக்கோட்டை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சிவபக்தியில் சிறந்த ரத்தினாவதி என்ற பெண்ணுக்கு அவளது பேறுகாலத்தில் சிவபெருமான் அவளது தாயாக வந்து சுகப்பிரசவம் செய்த தலம்.

ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். மிகவும் பழமையான இந்த மலைக்கோட்டை கோவில் 273 அடி உயரமும் 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுவில் தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மையும், மலையின் கீழ்ப்பகுதியில் மாணிக்கவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

 

தாயுமானவர் சன்னதியிலிருந்து இன்று மாலை 5- மணிக்கு தீபம் ஏற்றப்பட்டு, அங்கிருந்து தீபம் கொண்டு செல்லப்பட்டு,   மலைக்கோட்டை உச்சி தாயுமானவர் சன்னதி, பிள்ளையார் கோவில் முன்பாக உள்ள உயரமான இரும்பு  கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய்  ஆகியவற்றை ஊற்றி,  100 கிலோ எடை கொண்ட 300-மீட்டர் அளவுள்ள பருத்தி துணியாலான மெகா திரியிட்டு மகாதீபம் சரியாக மாலை 6 மணிக்கு வான வேடிக்கைகள் முழங்க ஏற்றப்பட்டது.  அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தனர்.

மேலும்  மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள பல்வேறு வீடுகளின் மாடியிலும், மலைக்கோட்டை பகுதி வீதிகளிலும் நின்று திரளான பக்தர்கள், தென்னாடுடைய சிவனே போற்றி என பக்திபரவசத்துடன் முழக்கமிட்டவாறு வழிபாடு செய்து, தங்களது வீடுகளில் அகல்விளக்கு மற்றும் குத்துவிளக்கில் கார்த்திகை தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.திருச்சி மலைக்கோட்டையில் ஏற்றப்படும் கார்த்திகை மகா தீபம் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறநிலையத்துறையினர், மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொண்டு இருந்தனர்.

 

இன்று மாலை ஏற்றபடும் இந்த மகா தீபம் தொடர்ந்து 3 நாட்கள் தொடர்ந்து  இரவும் பகலும் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களிலும் கார்த்திகை தீபம்  ஏற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.