மகளின் காதல் கணவரை கத்தியால் குத்திய தந்தை கைது
திருச்சி மாவட்டம், தொட்டியம் அழகுநாச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பிரசாந்த்(வயது 21) இவர் தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த அசோக்குமார் என்பவரது மகள் கவிப்பிரியா(வயது 19) என்பவரை கடந்த 6ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு அசோக்குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தொட்டியம் காவல் நிலையத்தில் கடந்த 19ம் தேதி இருவீட்டாரிடம் விசாரணை நடத்தி கவிப்பிரியா விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்ட கணவருடன் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கவிப்பிரியாவின் தந்தை அசோக்குமார் தனது மருமகன் பிரசாந்த் வீட்டிற்குச் சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி மருமகன் பிரசாந்தின் இடது பக்க வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். அப்போது தடுக்க வந்த பிரசாந்தின் தாய் செல்வியையும் கையால் தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் பிரசாத்தையும் மற்றும் அவரது தாய் செல்வியையும் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தொட்டியம் போலீசார் மீது வழக்கு பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர்.