பேரணி நடத்தி சிறந்த 6 கிடாரிக்கன்றுகளுக்கு பரிசு வழங்கல்…
திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட கும்பக்குடி கிராம ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கும்பக்குடி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா ஹரிகிருஷ்ணன் முகாமினை தொடங்கி வைத்தார். திருச்சி கால்நடை பராமரிப்பு துறை, மண்டல இணை இயக்குநர் மரு.எஸ்.எஸ்தர் ஷீலா முகாமிற்கு தலைமை தாங்கினார். திருச்சி கால்நடை பராமரிப்புதுறை, உதவி இயக்குநர் மரு.அ.மருதைராஜு முன்னிலையில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம்,
சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் ஆகிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 1175 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 55 பயனாளிகளுக்கு 55 கிலோ தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் மரு.அ.பத்மாவதி செய்திருந்தார். கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த 6 கிடாரிக்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.