கோயிலில் வெள்ளி பொருட்கள் திருடிய வாலிபர் கைது
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே எரகுடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி இரவு சாமிக்கு சாற்றுகிற வெள்ளி மற்றும் தங்கத்திலான ஆபரணங்கள் திருடு போனது. இது தொடர்பாக கோயில் பட்டாச்சாரியார் சேதுமாதவன் கொடுத்த தகவலின் பேரில், கோயில் செயல் அலுவலர் யுவராஜ் உப்பிலியபுரம் போலீஸில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ கலைசெல்வன் உள்ளிட்ட போலீஸார் முருகூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத் துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த நபர் எரகுடியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மதன்(வயது 24) என்றும், வரதராஜ பெருமாள் கோயிலில் திருடியதையும் கூறினாராம். உடனே அவரைக் கைது செய்த போலீசார் அவர் வசமிருந்து கோயிலுக்கு சொந்தமான வெள்ளி அரங்கநாதர் சிலை உள்பட இரண்டரை கிலோ எடையிலான வெள்ளிப் பொருள்கள் மற்றும் அரைப் பவுனில் பெருமாள் படம் பொறித்த தாலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.