குடியிருப்புக்குள் குளம், தண்ணீரில் மூழ்கிய வீடு, இரவில் அலையும் விஷஜந்துக்கள், நோய் தொற்று பரவும் அபாயம் – அத்தனையும் அரங்கேறும் மாநகராட்சி பகுதி!
திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் மாநகராட்சி பகுதியே அலங்கோலமாகி விட்டது. தண்ணீர் ஒதுங்க போதிய பாதாள சாக்கடை வசதி இல்லை என்றும், ரோடுகளில் தண்ணீர் தேங்கியும், குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தும் என ஒரு நாள் பெய்த மழைக்கு திருச்சி மாநகராட்சி டோட்டலாக அவுட்டாகி விட்டது. இனி வரும் மழை காலங்களை நினைத்து பார்த்தாலே என்ன அவலம் எல்லாம் நிகழப் போகிறதோ என தெரியவில்லை….

இது ஒரு புறமிருக்க நேற்று பெய்த மழையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 40வது வார்டு எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி பகுதியில் அரங்கேறும் அவலத்தின் தொகுப்புதான் இது! இந்த அரசு காலனி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மழையை பார்த்தால் ஆனந்தம் வரும். ஆனால் இப்பகுதி மக்கள் மழைக்காலம் என்றாலே முகம் சுளித்து தங்களுடைய வீடுகளையும் பிள்ளைகளையும் பாதுகாப்பதில் இறங்கி விடுகின்றனர்.

அப்பகுதியில் காலி மனைகள் இருப்பதால் ஆங்காங்கே மழை நீர் தேங்குவதால் குடியிருப்புக்கு அருகில் குளம்போல மழை நீர் தேங்கி, மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை அதே இடத்தில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மேலும் அந்த மழை நீரிலேயே குப்பைகளும் சேர்ந்து வருவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வார்டு மேஸ்திரி என அனைவரிடமும் புகார் கொடுத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். நேற்று பெய்த மழையில் கூட அப்பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து இரவு முழுவதும் வாசலிலேயே காத்திருந்த அவல நிலையும், காலை மழை நீர் வடிந்ததும் வீட்டிற்கு சென்றுள்ளனர், இரண்டு மூன்று வீடுகளில் பாம்பு பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் நுழைந்து உள்ளது, கொசுக்கடி தாங்க முடியாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு இரவு முழுவதும் அப்பகுதியினர் கண்விழித்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து காலி மனைகள் உள்ளவர்களிடமும், அப்பகுதியில் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தகுந்த தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர்களை காக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் மிக முக்கிய கோரிக்கையாக உள்ளது.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GIK8EHtoSzZArrJx8DcPlA