ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்; பக்தர்கள் வெள்ளத்தில் தத்தளித்த நம்பெருமாள்!
108 வைணவ திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வருடத்தில் மூன்று தேர் திருவிழாக்கள், மாசி தெப்பம், மார்கழி மாதம் சொர்கவாசல் திறப்பு என எண்ணற்ற விழாக்கள் நடைபெற்றாலும் இதில் சித்திரை தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் கொரோனோ பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக சித்திரை தேரோட்டம் நடைபெறாமல்


இருந்த நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நம்பெருமாள் கருடவாகனம், யாளிவாகளம்,யானை வாகனம், தங்ககுதிரை வாகனம், பூந்தேர், கற்பகவிருட்சவாகனம் என தினசரி பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்நிலையில் எட்டாம் திருநாளான நேற்று நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து திருத்தேர் அருகில் வையாளி கண்டருளினார். விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று காலை 6.30 மணியளவில் வெகுவிமர்சையாக துவங்கியது. கோவிந்தா ரங்கா ரங்கா என்கிற கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி நம்பெருமாள் திருத்தேரில் வலம் வந்தது பக்தி
பரவசமூட்டும் காட்சியாக இருந்தது. கிழக்குச் சித்திரை வீதிகளில் புறப்பட்டு, தெற்கு சித்திரை வீதி வழியாக மேற்கு சித்திரை வீதியை அடைந்த திருத்தேர், வடக்குவீதி வழியாக நுழைந்து பின்னர் மீண்டும் கிழக்கு சித்திரை வீதியில் உள்ள நிலையை வந்தடைந்தது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி தேரோட்டம் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுமார் 1000ம் போலீசார் ஸ்ரீரங்கம் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.