ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது

0 309
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழா நடைபெறும். முக்கிய விழாக்களில் தைத்தேர் திருவிழாவும் ஒன்றாகும். இத்திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 5-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 3-ந்தேதி நடைபெறுகிறது. தைத்தேரோட்ட விழாவை முன்னிட்டு தெற்கு உத்திர வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. அப்போது, முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு மந்திரங்கள் ஓதி புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர். இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தைத்தேரோட்ட திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் 2-ம் நாளான 27-ந்தேதி காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும், 28-ந்தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 29-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும், 30-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 31-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார்.

1-ந்தேதி நெல் அளவு கண்டருளூகிறார். 2-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 3-ந்தேதி காலை நடைபெறுகிறது. அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு காலை4.30 மணிக்கு வருகிறார். காலை 4.30 மணிமுதல் காலை 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது. 4-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான பிப்ரவரி 5-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.