போலி அரசு முத்திரையை பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தவர் கைது

0 331
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மார்டின்.இவருடைய அத்தையான மேரி சாராளுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மேரி சாராள் இறந்துவிட்டார். இந்நிலையில் மேரி சாராளுக்கு மார்டின் மட்டுமே வாரிசு ஆவார் என்று மார்ட்டின் வாரிசு சான்றிதழ் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அந்த சான்றிதழை பட்டா மாற்றத்திற்காக மார்ட்டின், லால்குடி தாலுகா அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த வாரிசு சான்றிதழின் உண்மை தன்மையை தாலுகா அலுவலகத்தில் மேட்டுப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அம்புரோஸ் ஆய்வு செய்தார். அப்போது அது போலியான வாரிசு சான்றிதழ் என்று கண்டறியப்பட்டது. மேலும் இது குறித்து மார்ட்டினிடம் விசாரித்தார். இதில், லால்குடி தாசில்தார் அலுவலகம் முன்பு ஏஜெண்டாக உள்ள ஒருவர் மூலம் அந்த வாரிசு சான்றிதழை பெற்றதும், லால்குடி அருகே உள்ள திருமணமேடு கிராமத்தை சேர்ந்தவரும், தற்போது வாளாடி அக்ரஹாரம் பகுதியில் உள்ள முதல் தெருவில் வசித்து வரும் 46 வயதான குமார் என்கிற குமாரவேல் என்பவர் போலி அரசு முத்திரையை தயார் செய்து, போலி வாரிசு சான்றிதழ் மற்றும் அரசு ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது.மேலும் குமாரவேல் ஏற்கனவே தாலுகா அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளரான வேலை பார்த்ததும், பின்னர் அவர் பணியில் இருந்து விலகியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் கையெழுத்தை போலியாக போட்டு, போலி அரசு முத்திரைகளை பயன்படுத்தி ஆவணங்களை தயார் செய்து, 2 ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு கொடுத்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் அம்புரோஸ் லால்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் குமாரவேல் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Leave A Reply

Your email address will not be published.