தனியார் பேருந்து பைக் மீது மோதி விபத்து: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
திருச்சி, ஜுன் 1 லால்குடி அருகே திருமலை மேடு புதிதரைச் சேர்ந்த தேவதாஸ் மகன் ஜான்பாண்டியன்(35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் மோட்டார் பைக்கில் தனது மனைவியை அழைத்துச் சென்று திருச்சியில் இறக்கிவிட்டு மீண்டும் திருமணமேடு நோக்கி வந்து கொண்டிருந்தார்.அப்போது வாளாடியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது அரியலூரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு மோட்டார் பைக்கின் மீது மோதியது.தொடர்ந்து சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி தனியார் பேருந்து நின்றது. இதில் மோட்டார் பைக்கில் வந்த ஜான்பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்களை பேருந்திலிருந்து பயணிகளை மீட்டனர்.இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்ததனர். அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மற்றும் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த ஜான்பாண்டியன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சாலை விதிகளை மதிக்காமல் தனியார்
பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனைவியை இறக்கி விட்டு வீடு திரும்பிய கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது