சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதியில் கடந்த 9 நாட்களாக அதிகளவில் ஆடுகள் திருட்டுப்போனது குறித்து மண்ணச்சநல்லூர் மற்றும் சமயபுரம் போலீஸ் நிலையத்தில் 10க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் சமயபுரம், பனமங்கலம் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் ஆடுகள் மேய்ந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் ஆடுகளை திருட முயன்றுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திருடர்கள் இருவரையும் விரட்டிய போது, திருட வந்த இரு இளைஞர்களும் கீழே விழுந்து காயமடைந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் பிடித்து அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திருவானைக்காவல் பஞ்சகரை பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ஜீவா(22), திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியைச் சேர்ந்த சேகர் மகன் ராகவன் என்பது தெரிய வந்தது. பொதுமக்கள் விரட்டிய போது இருவரும் தப்பியோடியதில் கீழே விழுந்ததில் காயமடைந்ததால் இருவரையும் போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆடு திருட பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.