திருச்சியில் கொரோனா சித்தா புத்துணர்வு மையம் – அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
தமிழகத்தில் கொரானோ தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சித்த மருத்துவ முறையை நோயாளிக்குக் கொண்டு செல்லும் வகையில் தமிழகத்தில் சித்த மருத்துவப் பிரிவை விரிவு படுத்த திட்டமிட்டது. அதன்படி இன்று திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான200 படுக்கை வசதிகளுடன் கூடிய சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அகியோர் திறந்து வைத்தனர்.
இம்மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருந்துகளான கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் காலை 6 மணிக்கு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, 8வடிவ நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவை பயனாளிகளுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்பட இருக்கிறது. நோயளியின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகர்வுத் தன்மைக்கு ஓமப்பொட்டணம் , உடல்வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் கொடுக்கப்படும். மேலும் இவ்வளாகத்தில் மன கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பயனாளிகள் யாரும் சித்தா கொரோனா மையத்தில் நேரிடையாக அனுமதிக்கப்பட மாட்டாது. திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திற்கு சென்று பதிவு பெற்று பின்பு கொரோனா சித்தா புத்துணர்வு மையத்திற்கு அனைத்து பரிசோதனையின் முடிவுகளை எடுத்துக் கொண்டு வருமாறு பயனாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், மாநகராட்சி தலைமை பொறியாளர் அமுதவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்.