திருச்சி தனிப்படை போலீசாரும், கோட்டை போலீசாரும் இணைந்து நடத்திய சோதனையில் மைசூரில் இருந்து வந்த முட்டைகோஸ் வேனில் கடத்தி வரப்பட் ரூ.30.50 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருள் பிடிபட்டது. இந்த குட்காவானது திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகரை சேர்ந்த விஜயபாஸ்கர் (வயது 50) என்பவர் கேட்டுக்கொண்டதன் பேரில் மைசூரில் உள்ள பவர்லால் என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டது என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றும் முத்து ஆகியோரை கோட்டை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குட்கா வியாபாரி விஜயபாஸ்கரை, கோட்டை போலீசார் பரிந்துரையின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை சிறையில் இருக்கும் விஜயபாஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.