திருச்சி திருவானைக்கோவில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருபவர் நாராயணன். இவர் கடந்த 28-ந்தேதி கடையில் பணியில் இருந்த போது அங்கு வந்த முகேஷ், ரகுபதி, ஜீவா, நாகராஜ் ஆகியோர் கடையில் மது பாட்டில்கள் வாங்கி கொண்டு பணம் கொடுக்க மறுத்துள்ளனர். மேலும் நாராயணனை தகாத வார்த்தையால் திட்டியும், கத்தியால் கையில் கிழித்து காயம் ஏற்படுத்தினர். மேலும் திருவானைக்கோவில் பஸ் நிறுத்தம் அருகில் பானி பூரி விற்பனை செய்து வரும் ஆனந்தன் என்பவரிடம் பானி பூரி வாங்கியதற்காக பணம் கேட்டு தர மறுத்து, கத்தியால் கையில் கிழித்து சென்றார்கள்.
இந்த சம்பவம் குறித்து நாராயணன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் முகேஷ், ஜீவா, நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது ஸ்ரீரங்கம், கோட்டை போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள ரகுபதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.