பிச்சாண்டார்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

0 411
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் மும்மூர்த்திகள் திருத்தலம் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதாகவும், பிரம்மா, விஸ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள் சமேதர்களாக வீற்றிருக்கும் இந்தியாவிலேயே ஒரே தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இங்கு வருடத்திற்கு ஒருமுறை திருக்கார்த்திகை தீப திருநாளில் மட்டும் மும்மூர்த்திகள் ஒன்றாக பக்தர்களுக்கு காட்சியளிப்பது மிக சிறப்பாகும். இக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மும்மூர்த்திகளுக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதனை முன்னிட்டு உற்சவர்கள் பிரம்மா, புருஷோத்தம பெருமாள் மற்றும் பிச்சாண்டேஸ்வரர் ஆகியோர் சிறப்பு பூ அலங்காரத்தில் கோவில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து அலங்கார தீபாரதனை காட்டப்பட்டு 3 தெய்வங்களும் ஒரே நேரத்தில் தனித்தனி கேடயத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து கோவில் வெளி பிரகாரத்தில் புருஷோத்தம பெருமாளுக்கு கிழக்கிலும், பிரம்மாவிற்கு தெற்கிலும், பிச்சாண்டேஸ்வரருக்கு மேற்கிலும் அடுத்தடுத்து சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. தொடர்ந்து மும்மூர்த்திகள் வீதிஉலா வந்து ஓரிடத்தில் ஒன்றாக நின்று பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தனர். இதனை அடுத்து மும்மூர்த்திகள் மூலஸ்தானம் சென்றடைந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஒரே நேரத்தில் மும்மூர்த்திகளை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.