திருச்சி மாவட்டம், முசிறி தென்கள்ளர் தெருவை சேர்ந்தவர் கோடி(வயது 21). தனது மனைவி சிவபாரதியுடன் வசித்து வருகிறார். இவர் முசிறி அருகே குணசீலம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் வால்பாறையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கோடி வீட்டை பூட்டி விட்டு சாவியை வீட்டின் ஜன்னல் அருகிலுள்ள டப்பாவில் வைத்துவிட்டு தனது மனைவியுடன் சென்றுள்ளார். இந்தநிலையில் அவரது நண்பர் அப்பு என்கிற மீனாட்சிசுந்தரம் கோடியின் வீடு திறந்துள்ளது குறித்து அவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கோடி விரைந்து வந்து தனது வீட்டை பார்த்தபோது, வீட்டின் கதவுகள் திறந்தநிலையில் இருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்றபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து முசிறி போலீஸ் நிலையத்தில் கோடி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.