புதிய வேளாண் காடு வளர்ப்புத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் மானியத்தில் வினியோகம்

0 315
Stalin trichy visit

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையை உருவாக்கவும், தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டம் ரூ.11 கோடியே 14 லட்சம் செலவில் 2021-22-ம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 2.04 லட்சம் மரக்கன்றுகள் ஒதுக்கீடாக பெறப்பட்டு, தேக்கு, மகாகனி, வேம்பு, மலை வேம்பு, புளி, செம்மரம் மற்றும் புங்கன் ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்க தயாராக உள்ளது.

விவசாயிகள் அருகே உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் பதிவு செய்து, தேவையான மரக்கன்றுகளை ஆ.சு.பாளையத்தில் தமிழ்நாடு வனத்துறையின் நாற்றங்காலில் இருந்து இலவசமாக பெற்று கொள்ளலாம். மரக்கன்றுகள் வினிேயோகம் வரப்பு நடவுமுறை எனில் ஏக்கருக்கு 50 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் நடவு செய்ய ஏக்கருக்கு 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும். மரக்கன்றுகளை பராமரித்திட விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக 2-ம் ஆண்டு முதல் 4-ம் ஆண்டு வரை உயிருடன் உள்ள மரக்கன்று ஒன்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.7 வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ.21 வழங்கப்படும்.

மரக்கன்றுகள் அனைத்தும் மழைநீரை பயன்படுத்தி டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நடப்பட்ட மரக்கன்றுகள் வருவாய்த்துறையின் அடங்கல் பதிவேட்டில் பதியப்படும். இந்த திட்டத்தில் சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். உழவன் செயலி வாயிலாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் உற்பத்தி திறன் பாதிப்படையாமல் கூடுதலாக ஊடுபயிராக மரங்களை வளர்ப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில் பயனாளிகள் தேர்வு, மரக்கன்றுகள் வினியோகம் மற்றும் நடவுப்பணிகள் ஆகியவற்றை அரசு இணையதள செயலி வாயிலாக கண்காணிக்கப்படும். இந்த திட்டத்தால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு நிரந்தர வைப்புத்தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண்வளமும் அதிகரிப்பதோடு, பசுமை பரப்பும், சுற்றுச்சூழலும் மேம்படுத்தப்படும். எனவே திருச்சி மாவட்ட விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்த பயன் அடைய வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.