திருச்சி, ஜுன் 14 புதுக்கோட்டையிலிருந்து திண்டுக்கல்லுக்கு ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தை ராஜாளிபட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (46) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகில் வந்தபோது அண்ணாவி நகரைச் சேர்ந்த அப்பாஸ் (35) என்பவர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திக் கொண்டு போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார். அப்போது பேருந்து ஓட்டுநர் ஹாரன் அடித்தபோதும் அப்பாஸ் நகராமல் இருந்ததால் ஓட்டுநர் மீண்டும் ஹாரன் அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த அப்பாஸ் ஓட்டுநரை தாக்கியுள்ளார். இருவருக்கும் கைகலப்பு ஆனதால் காயமடைந்த ஓட்டுநர் பேருந்தை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் அப்பாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.