வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்
திருச்சி, ஏப்.8 பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம்.
வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி. ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், நேற்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் – சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.