கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மூடப்படும் என்றும், கோவிலுக்குள் சென்று சாமியை வணங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அதிகத் தொகை வாங்கிக் கொண்டு சிலர் மொட்டை அடிப்பதாக சமயபுரம் போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மேற்பார்வையில், சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்ளிட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது புள்ளம்பாடி வாய்க்கால் அருகே அனுமதியின்றி மொட்டையடித்த மருதூரைச் சேர்ந்த கண்ணன்(44), அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்(32), கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சூரியனுர் கீழத்தெருவை சேர்ந்த சுப்பிரமணி (50), சமயபுரத்தை சேர்ந்த ராஜு(43), ஜீவகன்(50), வி.துறையூரை சேர்ந்த குமார்(29) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.