பூமிநாதன் கொலை வழக்கு; முக்கிய குற்றவாளி மணிகண்டனின் பரபரப்பு வாக்குமூலம்

0 333
Stalin trichy visit

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடிய கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தஞ்சை மாவட்டம் கல்லணையை சேர்ந்த மணிகண்டன்(வயது 19) மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கொலை சம்பவம் குறித்து மணிகண்டன் அளித்த வாக்குமூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிகண்டன் அளித்த வாக்குமூலம் குறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், கல்லணையிலிருந்து மூன்று ஆடுகளை திருடிச் சென்ற நாங்கள் மூவரும் திருவெறும்பூர், நவல்பட்டு வழியே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆடுகளை விற்பதற்காக சென்றோம்.

இரவு 1.45 மணியளவில் பூலாங்குடி Sbi ATM அருகே மூவரும் சென்றபோது நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் தலைமை காவலர் சித்திரவேல் இருவரும் வழிமறித்தனர். ஆயினும் நாங்கள் வண்டியை நிறுத்தாமல் தப்பி ஓடினோம். ஆனால் விடாது துரத்தி வந்த எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் எங்கள் மூவரையும் மடக்கிப்பிடித்து தற்காப்புக்காக நாங்கள் வைத்திருந்த அரிவாளை பறித்துக் கொண்டார்.

மேலும் என்னிடமிருந்து எனது தாயின் தொலைபேசி எண்ணை வாங்கி பேசினார்.
அதுமட்டுமல்லாது காவல்நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வருமாறு கூறினார். இதனால் அங்கிருந்து தப்ப முடியாது என நினைத்த நான் (மணிகண்டன்) போலீசார் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓட நினைத்தோம். அவர் போனில் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பூமிநாதனை கல்லால் தாக்குமாறு இரு சிறுவர்களிடமும் சைகையால் கூறினேன். அவர்கள் கல்லால் தாக்கிய போது பூமிநாதன் நிலைகுலைந்து நின்றார்.

அப்போது அவர் கையில் இருந்த அரிவாளை பிடுங்கினேன். ஆனால் அவர் விடவில்லை. இதனால் என் கையில் காயம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த அறிவாளை பறித்து பூமிநாதனின் தலையில் மூன்று இடங்களில் வெட்டிடேன். அவர் சரிந்து விழுந்தார்.
உடனே நாங்கள் மூவரும் எங்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். மேலும் அவரது செல்போன், வாக்கி டாக்கி ஆகியவற்றை அங்கிருந்த மழை நீர் குட்டையில் தூக்கி எறிந்துவிட்டோம். இதனால் எங்களை போலீசார் பிடிக்க முடியாது என நினைத்தோம்.

ஆனாலும் பூமிநாதன் எனது தாயாரிடம் தொடர்பு கொண்டு பேசியதால் அந்த எண் மூலம் தாயின் இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் கல்லணை வீட்டிற்கு வந்து எங்களை கைது செய்தனர். இவ்வாறு மணிகண்டன் வாக்குமூலம் அளித்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. நேற்று தமிழக டிஜிபி செய்தியாளர்களை சந்தித்த போது முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் இரண்டு சிறுவர்கள் பூமிநாதனை பின்பக்கமிருந்து தாக்கியதால் தான் சரிந்து விழுந்தார் என்கிற இதே தகவலை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.