டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு; கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாரிகள் பணம் மற்றும் பொருட்கள் வசூல் செய்வதாக வந்த தகவலைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகளுக்கு ரூ.5, 10, 20 என கூடுதலாக பணம் வசூலித்து விற்பனை செய்வதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை, கொட்டப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று இரவு 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். பின்னர் டாஸ்மாக் ஊழியர்களை தனிமைப்படுத்தி விசாரணை நடத்தினர். அப்போது 3 கடைகளில் சேர்ந்து கணக்கில் வராத ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் 9 பேரிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்தப்பட்டது.