தரமான விதை உற்பத்தியில் விதைச்சான்றுத் துறையின் பங்களிப்பு

0 284
Stalin trichy visit

திருச்சி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் வே.அறிவழகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
இந்தியப் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டதாகும். விவசாயத்தில் அதிக மகசூல் பெற பல்வேறு இடுபொருட்கள் இருந்தாலும், முக்கியமான இடுபொருள் தரமான விதை ஆகும். தரமான சான்று பெற்று விதைகளை உரிய நேரத்தில் தேவைப்படும் அளவிற்கு விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதைச்சான்றுத் துறையின் நோக்கமாகும்.

விதைச்சான்றுத் துறையில் தற்போது அரசு, அரசு சார்பு நிறுவனங்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் முறைப்படி பதிவு செய்து உற்பத்தி செய்யப்படும் விதைகளுக்கு சான்றளிப்பு செய்யப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி நிலையங்களில் கருவிதை விதைப்பண்ணை அமைக்கப்படுகிறது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர், திருச்சி தலைமையிலான கருவிதை கண்காணிப்பு குழு, ஒவ்வொரு பயிர் நிலைகளிலும் ஆய்வு செய்து தரமான கருவிதை உற்பத்தி செய்யப்படுகிறது.

கருவிதைகளைக் கொண்டு ஆதாரம் மற்றும் சான்று நிலை விதைப் பண்ணைகள் அரசு மற்றும் தனியார் நிறுவன உற்பத்தியாளர் மற்றும் விதைப்பண்ணை விவசாயிகள் வயல்களில் அமைக்கப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விதைப் பண்ணைகளில் விதைச்சான்று அலுவலர்களால் ஒவ்வொரு பயிர் நிலைகளிலும் வயலாய்வு பணி மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது, தமிழ்நாடு, அகில இந்திய அளவில் விதைச்சான்று துறையில் முன்னோடி மாநிலமாக, அனைத்து விதைப்பண்ணை பதிவுகளும் இணையதளம் மூலம் பதிவு செய்யப்படுகிறது.

திருச்சி மாவட்ட விதைப்பண்ணை ஆண்டு இலக்கு 1475 எக்டர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் நிறுவனங்களின் மூலம் நெல் விதைப்பண்ணை 673 எக்டர், சிறுதானியத்தில் 25 எக்டர், பயறுவகை பயிர்களில் 135 எக்டர், எண்ணெய் வித்து பயிர்களில் 124 எக்டரும் விதைப்பண்ணை பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான விதை கிடைத்திடும் பொருட்டு தற்சமயம் அந்தந்த வட்டார விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வயலாய்வின் போது சுட்டிக் காட்டப்படும் கலவன்கள் அந்த விதைப்பண்ணை விவசாயி மூலம் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு கலவன் எடுக்கப்பட்ட வயலை விதை உற்பத்தியாளர் மற்றும் சாகுபடியாளர் முன்னிலையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மற்றும் விதைச்சான்று அலுவலர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதைப் பண்ணையின் தரம் உறுதி செய்யப்படுகின்றது.

வயலின் தரம் விதையின் தரத்திற்கு இருந்தால் மட்டுமே மேற்கொண்டு விதைக்காக அறுவடை செய்ய அனுமதிக்கப்படும் என்ற விபரம் விதைப்பண்ணை விவசாயிகளிடம் தெரிவித்து சான்றுப்பணி தொடர அறிவுரை வழங்கப்பட்டு வருகின்றது.
வயலாய்வில் தேர்ச்சி பெற்ற தரமான விதைக் குவியல்களை மாவட்டத்திலுள்ள விதை சுத்திகரிப்பு நிலையங்களில் விதை சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. சுத்தி செய்யப்பட்ட விதைக் குவியலில் இருந்து விதை மாதிரி விதைச்சான்று அலுவலரால் எடுக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையம் திருச்சிக்கு பகுப்பாய்விற்கு அனுப்பப்படுகிறது. பகுப்பாய்வு முடிவில் தேர்ச்சி பெற்ற விதைகளுக்கு மட்டுமே சான்றட்டை பொருத்தும் பணி விதைச்சான்று அலுவலர் முன்னிலையில் மேற்கொள்ளப்படுகிறது.

திருச்சி மாவட்ட விதை சுத்தி பணி செய்திட இவ்வாண்டு 1170 மெ.டன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு இதுவரை 1650 மெ.டன் விதை நெல் சுத்தி செய்யப்பட்டுள்ளது. சிறுதானியத்தில் 21 மெ.டன் பயறு வகை பயிர்களில் 63 மெ.டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் 85 மெ.டன்களும், ஆகமொத்தம் 1819 மெ.டன் சுத்தி பணி செய்து சான்றட்டை பொருத்தி விவசாயிகளுக்கு தரமான விதைகளை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எதிர் வரும் நெல் தரிசு உளுந்துக்கு தேவையான விதை உளுந்து சுத்தி பணி முடிக்கப்பட்டு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறுகிய கால நெல் இரகங்கள் சுத்தி செய்யப்பட்டு சான்றட்டை பொருத்தப்பட்டு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தனியார் விதை சுத்தி நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே விதைப்பண்ணைகளை அமைத்து தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து கூடுதல் லாபம் அடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.