திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையருக்கு கொரோனா
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையராக பணியாற்றி வரும் தயாநிதிக்கு கொரோனா தொற்று இருந்தது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 52 பேர் நேற்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 75 ஆயிரத்து 404 ஆக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1022 ஆக உள்ளது.