நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் ஆற்றின் பழைய பாலம் இடிக்கும் பணிகள் தொடங்கியது…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழைய கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது.
திருச்சி மாநகரையும் புறநகரையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இரும்பு பாலம் கட்டப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்தது. நாளடைவில் பாலம் வலுவிழந்ததால் அதில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த பழைய பாலத்தை பொதுமக்கள் நடைப் பயிற்சிக்காகவும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் பயன்படுத்தி வந்தனர். மேலும் அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டடு் கடந்த 2016 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொள்ளிடம் ஆற்றில் ஒன்றை லட்சம் கன அடிக்கு மேல் திறந்து விடப்பட்ட உபரி நீரால் பாலத்தின் 18 மற்றும் 19 தூண்கள் அரிக்கப்பட்டு விரிசல் விழுந்தது. இதையடுத்து அடுத்த இரண்டு நாட்களில் 3 தூண்கள் இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பாலத்தை இடிப்பதற்கு தமிழக அரசால் ஒப்பந்தம் விடப்பட்டது.தற்போது கொள்ளிடம் ஆற்றில் உள்ள பழைய பாலத்தை இடிக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர்.