திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே முத்தன் தெரு பகுதியில் கழிவு நீர் கால்வாய் முற்றிலுமாக தூர்ந்து போய் விட்ட நிலையில் கழிவு நீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி மழைபெய்தால் மழைநீரும், கழிவு நீரும் ஒன்றாக கலந்து தேங்கி நிற்கும் நிலையும் உள்ளது. இதனால் மக்களுக்கு தொற்று நோய் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக இதே நிலை தான் நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலாளர் உலகநாதன் சாலையில் தேங்கி இருந்த நீரை அப்புறப்படுத்திட வலியுறுத்திடும் வகையில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்கின்ற வகையிலும் மீன் வளர்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனே தேங்கி உள்ள நீரை அப்புறப்படுத்துவதுடன் கழிவுநீர் கால்வாயை முறைப்படுத்திட வேண்டும் என்றும் கோசங்கள் எழுப்பினர்.