பெண் வயிற்றில் இருந்த 8 கிலோ கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை!
கரூர் மாவட்டத்தில் கூலிவேலை செய்த 45 வயது பெண்ணுக்கு சில மாதங்களாக வலி மற்றும் வீக்கத்துடன் மலம் கழிப்பதிலும் சிரமம் இருந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு அல்ட்ரா ஸ்கேன், எம்ஆர்ஐ உள்ளிட்ட பரிசோதனைகள் செய்ததில் கர்ப்பப்பையில் 8 கிலோ அளவுள்ள நார்த்திசு கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து டீன் வனிதா வழிகாட்டுதல்படி மகப்பேறு துறை தலைவர் டாக்டர் உமா, மோகன்ராஜ்,
மயக்கமருந்து துறை தலைவர் சிவக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் டாக்டர்கள் பாக்கியவதி, உமா மகேஸ்வரி, நந்தகுமார், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 40 செ.மீ. நீளம், 30 செ.மீ. அகலம் 8 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சை முடிந்த பெண் முழு குணமடைந்து வீட்டிற்கு சென்று விட்டார். தனியார்
மருத்துவமனைகளில் ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவாகும். இந்த அறுவை சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டது என திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா கூறினார். தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் குழுவினரை டீன் வனிதா, கண்காணிப்பாளர் அருண்ராஜ் உள்பட பலர் பாராட்டினர்.