திருச்சி கே.கே.நகர் ஜாகீர் உசேன் தெருவை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(வயது 29). இவர் சென்னை-திருச்சி சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது, இவரை 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வழிமறித்தது. அவர்கள், கத்தியை காட்டி மிரட்டியதுடன், அவரை தாக்கி, 3 பவுன் தங்க சங்கிலி, வெள்ளி அரைஞாண், ரூ.4 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை மர்ம கும்பல் பறித்துச்சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ஹரிகிருஷ்ணனை தாக்கி கொள்ளையடித்தது திருச்சி பாலக்கரை கெம்ஸ்டவுணை சேர்ந்த அர்ஷத் முகமது அலி(வயது 19), முகமது ஜலாலுதீன், ஜமால் முகமது மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுவனையும், அர்ஷத் முகமது அலியையும் கைது செய்த போலீசார் மற்றவர்களை தேடி வருகிறார்கள்.